21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை – நிர்வாகம் எச்சரிக்கை!

0
1

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதைத் தடுத்திட டாஸ்மாக் நிர்வாகம் தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது வழங்கவோ கூடாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து டாஸ்மாக் கடைப் பணியாளர்களும் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளரின் வயதில் கடைப் பணியாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், அந்த வாடிக்கையாளரின் வயதை உறுதிப்படுத்த உரிய ஆவணங்களைக் கேட்க வேண்டும். குறிப்பாக, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் (Driving License) அல்லது இதர அரசு அங்கீகாரம் பெற்ற வயதுச் சான்று ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளுக்குப் புறம்பாக 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் விஜய் அவர்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்தார். அதன்படி:

கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள கடைகள். பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் உள்ள கடைகள். ஆகியவற்றை முதற்கட்டமாக மூடுவதற்குப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த வயது வரம்பு கட்டுப்பாடு, சமூக நலனைக் கருத்தில் கொண்ட அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.