சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 2ஆம் இடம்

0
1

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்றன. நாடு முழுவதும் 19,967 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.

மொத்தமாக 17 லட்சத்து 68 ஆயிரத்து 968 மாணவ, மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், 15 லட்சத்து 7 ஆயிரத்து 109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி வீதம் 85.20 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.19 சதவீதம் குறைவாகும்.

நாடு முழுவதும் உள்ள 22 மண்டலங்களில் திருவனந்தபுரம் மண்டலம் 95.62 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை மண்டலம் 93.84 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், பெங்களூரு மண்டலம் 93.19 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

இந்த தேர்வில் மாணவியர்கள் 88.86 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாணவர்களின் 82.13 சதவீத தேர்ச்சியை விட 6.73 சதவீதம் அதிகமாக சாதனை படைத்துள்ளனர். மேலும் சிறப்பு தேவையுள்ள 6,342 மாணவர்களில் 5,718 பேர் தேர்ச்சி பெற்று 90.16 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 94,028 பேர். அதேபோல் 95 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 17,113 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாரியாக பார்க்கும்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 98.55 சதவீத தேர்ச்சியுடன் முன்னிலை வகிக்கின்றன. ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் 98.47 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 89.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

சென்னை மண்டலத்தில் மட்டும் 1,03,391 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 95,979 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் 88,146 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 83,962 பேர் வெற்றி பெற்று 95.25 சதவீத தேர்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரியல், கணக்குப்பதிவியல் உள்ளிட்ட பல பாடங்களில் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.