தமிழ்நாடு அரசின் புதிய அரசுத் தலைமை வழக்கறிஞராக (Advocate General) மூத்த வழக்கறிஞர் திரு. விஜய் நாராயண் அவர்களை நியமித்து தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு முக்கியத் துறை ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முந்தைய ஆட்சியில் அரசுத் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.எஸ்.ராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, காலியாக இருந்த அந்தப் பதவிக்கு விஜய் நாராயண் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் அவர்களுக்கு இந்தத் துறை சார்ந்த அனுபவம் ஏற்கனவே உள்ளது. அதிமுக ஆட்சியில் பணி: இதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது, அவரே தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகப் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தவெக அரசு பதவியேற்றுள்ள சூழலில், மீண்டும் அதே பொறுப்பிற்கு அவர் கொண்டு வரப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் சட்ட ரீதியான விவகாரங்களில் அரசுக்குப் பிரதிநிதியாகச் செயல்படவும், உயர் நீதிமன்றத்தில் அரசின் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கவும் இந்த நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.



