மதுராந்தகத்தில் தவெக நகர பொறுப்பாளர் கைது

0
1

மதுராந்தகத்தில் பெண் ஊழியரின் கணவரை தாக்கி காயப்படுத்தியதாக குற்றச்சாட்டில் தவெக நகர பொறுப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஜா மொய்தீன் (எ) ராஜா, மதுராந்தகம் நகரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். மேலும் அவர் தவெக கட்சியின் மதுராந்தகம் நகர பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரது கடையில் பணியாற்றி வந்த அம்பிகா என்ற பெண் ஊழியருக்கும், அவரது கணவருக்கும் பஜார் பகுதியில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ராஜா சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், அங்கு பெண் ஊழியரின் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஏற்பட்ட மோதலில், அவர் தாக்கியதில் அம்பிகாவின் கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் தமிழ்நாடு காவல்துறை சார்பில் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, காஜா மொய்தீன் (எ) ராஜாவை கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.