முன்னாள் அமைச்சர் காமராஜ் நீக்கம்; பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள்!

0
1

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களின் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்ட அதிமுக-வில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவாரூர் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக உடைந்தனர். இதில் ஒரு தரப்பினர் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதனைக் கட்சித் துரோகமாகக் கருதிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆதரவு அளித்த நிர்வாகிகளை அதிரடியாக நீக்கிவிட்டுப் புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டச் செயலாளரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகத் திருவாரூர் அதிமுக நகரச் செயலாளராக இருந்த ஆர்டி மூர்த்தி (என்கிற தட்சிணாமூர்த்தி) புதிய மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய மாவட்டச் செயலாளர் நியமனத்தை வரவேற்று, திருவாரூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கூடினர். அவர்கள் உற்சாக மிகுதியால் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை திருவாரூர் மாவட்ட அதிமுக-வில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் போன்ற மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டு, புதிய ரத்தம் பாய்ச்சப்படும் இந்தச் சூழல், டெல்டா மாவட்ட அதிமுக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.