அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை முடக்கம்! ஜாரெட் குஷ்னர் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்!

0
3
e

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தையை, அதிபர் டொனால்டு டிரம்ப் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளார். ஈரானியத் தலைவர்களிடையே நிலவும் அதிகாரப் போட்டியைக் காரணம் காட்டி, இந்தப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியுள்ள டிரம்பின் அதிரடி முடிவு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க, அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் செல்லவிருந்தனர். ஆனால், அவர்களைச் செல்ல வேண்டாம் என உத்தரவிட்ட டிரம்ப், இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில், “ஈரான் நாட்டுத் தலைவர்களிடையே மிகப்பெரிய அதிகாரப் போட்டியும், குழப்பமும் நிலவுகிறது; யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தப் போரில் அமெரிக்காவின் கையே ஓங்கியுள்ளது. எனவே, பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் ஈரான் எங்களை அழைக்கட்டும்,” எனத் தன்னிச்சையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திடீர் முட்டுக்கட்டையால், இரு நாடுகளுக்கும் இடையேயான பகை மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) தற்போது அமெரிக்கா மற்றும் ஈரானின் இருமுனை முற்றுகையில் சிக்கியுள்ளது. இதன் விளைவாக, அந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து 97 சதவீதம் வரை சரிந்துள்ளது. அமெரிக்கா முதலில் இறங்கி வர வேண்டும் என ஈரான் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், டிரம்பின் இந்த ஆக்ரோஷமான நிலைப்பாடு மீண்டும் ஒரு போர் மூள்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.