சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையின் (Strong Room) கண்காணிப்புப் பணியில் இருந்த ஊழியர், பணியின்போது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடத்தில் நடைபெற்ற இந்த விதிமீறல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு முடிந்து, இயந்திரங்கள் அனைத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பலத்த பாதுகாப்பு நிறைந்த ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. இதனை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கெனத் தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கண்காணிப்புப் பணியில் இருந்த யுவராஜ் என்ற ஊழியர், தனது கடமையைச் செய்யாமல் அங்குள்ள திரையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைச் சட்டவிரோதமாகப் பார்த்துள்ளார்.
வேடிக்கை என்னவென்றால், தான் படம் பார்ப்பதை ஒரு புகைப்படமாக எடுத்து, அதனைப் பெருமையுடன் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் யுவராஜ் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி, தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பில் இத்தகைய அஜாக்கிரதை நீடிப்பது கண்டனத்திற்குரியது எனப் பலரும் விமர்சித்தனர். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியது மற்றும் பாதுகாப்புப் பணியில் அஜாக்கிரதையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து யுவராஜைக் கைது செய்தனர். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படக் கூடாது என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.





