தமிழக தேர்தல் தரவுகளில் நீடிக்கும் மர்மம்.. இறுதி நிலவரத்தை வெளியிடாதது ஏன்?

0
1

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிந்து 5 நாட்கள் ஆகியும், வாக்குப்பதிவு குறித்த இறுதிப் புள்ளிவிவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடாதது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாலின வாரியான விவரங்கள் மற்றும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த தெளிவான அறிக்கை வராததால், வெற்றி வாய்ப்புகளைக் கணிக்க முடியாமல் புதிய கட்சிகள் தவித்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், வாக்குப்பதிவு முடிந்த அன்று இரவு 85.15% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு மறுசரிபார்ப்பின் அடிப்படையில் இந்தத் தற்காலிக சதவீதம் 85.10% ஆகக் குறைக்கப்பட்டது. இந்த 0.05% சரிவு ஏன் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை ஆணையம் அளிக்கவில்லை. அதே சமயம், திமுக மற்றும் அதிமுக போன்ற அனுபவம் வாய்ந்த கட்சிகள் ‘படிவம் 17C’ மூலம் தரவுகளைப் பெற்று தங்களது வெற்றி வாய்ப்புகளைக் கணித்து வரும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி போன்றவை அதிகாரப்பூர்வ இறுதி அறிக்கைகளுக்காக இன்னமும் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

2025 நவம்பரில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள்ளேயே பாலின வாரியான முழுமையான தரவுகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், தமிழகத்தில் 5 நாட்களாகியும் தரவுகள் வெளியிடப்படாதது குறித்து மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சுமார் 6 லட்சம் தபால் வாக்குகள் உள்ளதால், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை முழுமையான அறிக்கையை வழங்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். பீகாரில் சாத்தியமான துல்லியம் தமிழகத்தில் ஏன் இல்லை என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறுகையில், “முழுமையான தரவுகளைக் கேட்டால் மறுசரிபார்ப்பு நடப்பதாகக் கூறித் தவிர்க்கின்றனர்; குளறுபடிகள் இருப்பின் நீதிமன்றத்தை அணுகுவோம்” என எச்சரித்துள்ளார். அதிமுக தரப்பில் இ.எஸ். இன்பாதுரை கூறுகையில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கிடைக்காதது ஒருவிதத் தொய்வை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுமார் 6 லட்சம் தபால் வாக்குகள் இருப்பதால் இறுதி நிலவரத்தில் 1% மாற்றம் இருக்கக்கூடும் என ஆணையம் கூறினாலும், இழுபறியான தொகுதிகளில் இந்த 1% வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.