முடிந்தால் பதவியை ராஜினாமா செய்யுங்க – மம்தாவுக்கு எதிராகத் திரும்பிய 60 எம்எல்ஏக்களுக்கு மஹுவா மொய்த்ரா ஓபன் சேலஞ்ச்!

0
6

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 280 இடங்களில் மெகா வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், தோற்றுப்போன திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்பொழுது அடியோடு உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 15 ஆண்டுகால ஆட்சியைப் பறிகொடுத்து, மம்தா பானர்ஜியும் கொடூரத் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், கட்சிக்குள்ளேயே மம்தாவுக்கு எதிராக 60 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க மம்தா நடத்திய கூட்டத்தில் வெறும் 20 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிடா பிரதா 58 எம்எல்ஏக்களின் ஆதரவோடு புதிய தலைவராக உருவெடுத்துள்ளார். இதனால் திரிணாமுல் நிர்வாகிகள் பலர் பாஜக-வில் ஐக்கியமாகி வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில், மம்தாவின் தீவிர ஆதரவாளரான மஹுவா மொய்த்ரா எம்பி, துரோகம் இழைக்கும் எம்எல்ஏக்களுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்படாத நிலையிலும் திரிணாமுல் 41 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றால், அது மம்தாவின் ஒற்றைத் தலைமைக்குக் கிடைத்த தார்மீக வாக்குகளே ஆகும். மம்தாவின் முகத்தைக் காட்டி, பாஜக எதிர்ப்பு வாக்குகளால் வென்றவர்கள் இன்று அவருக்கு எதிராகச் செயல்படுவது நியாயமல்ல. தாங்கள் தான் உண்மையான திரிணாமுல் என்று கூற இவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. மம்தாவை எதிர்ப்பவர்கள் முதலில் தங்களது எம்எல்ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்யட்டும்! அதன் பின் நடக்கும் மறுதேர்தலில் தனித்து நின்று முடிந்தால் வென்று காட்டட்டும்” என்று அனல் பறக்கும் சவாலை விடுத்துள்ளார்.