மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் யார் இருந்தாலும் சரி, அவர்கள் அரசியல் மட்டுமே செய்வார்கள். இதில் புதியதாக எதுவும் இல்லை என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அனல் பறக்கும் வகையில் கருத்து தெரிவித்துத் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை (DPR) மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திடமும், மத்திய நீர் வள ஆணையத்திடமும் (CWC) கர்நாடக அரசு அண்மையில் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தது. இதற்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் சூழலில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இந்த விவகாரம் குறித்துப் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
அப்போது தமிழகத் தலைவர்களின் எதிர்ப்பை அடியோடு நிராகரித்துப் பேசிய அவர், “கடந்த 30, 40 ஆண்டுகளாகவே மேகதாது அணைக்குத் தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் தற்பொழுது புதிதாக எதுவும் இல்லை. அணை விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துவிட்டது. நாங்கள் சட்டம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி மட்டுமே முழுமையாகச் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் யார் இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் அதைப் பற்றி எங்களுக்கு எவ்விதக் கவலையும் இல்லை” என்று கறாராகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய தவெக அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டுத் தலைவர்களைத் நேரடியாக வம்புக்கு இழுத்துப் பேசியிருப்பது இரு மாநில எல்லையில் மீண்டும் காவிரிப் போர் வெடிப்பதற்கான உகந்த சூழலை உருவாக்கியுள்ளது.





