செங்கல்பட்டில் 75 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி: விவசாயிகளுக்கு மானியம்

0
2

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர் தேவையை குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் உணவு, ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் 2026-27ஆம் ஆண்டில் மொத்தம் 75 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பயிர்களுக்கு அதிகளவில் நீர் தேவைப்படுவதால், தற்போதைய நீர் பற்றாக்குறை சூழலில் விவசாயிகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, குறைந்த நீர் தேவையுடைய மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதன்படி, மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டில் 100 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 25 ஏக்கரும், உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் 50 ஏக்கரும் சேர்த்து 75 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.

மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 2.5 ஏக்கருக்கு ரூ.11,500 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், முதல் முறையாக திருக்கழுக்குன்றம் வட்டார விவசாயிகளும் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் ‘உழவர்’ செயலி அல்லது தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் சாகுபடி பணிகள் தொடங்கப்பட உள்ளன.