Home செங்கல்பட்டு மாமல்லபுரம் கடலில் செயற்கை பவள பாறைகள் அமைக்கும் மீனவர்கள்

மாமல்லபுரம் கடலில் செயற்கை பவள பாறைகள் அமைக்கும் மீனவர்கள்

0

தமிழகத்தில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் காரணமாக, மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கடலில் மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், தென்னை ஓலைகள் மற்றும் மரக்குச்சிகளை பயன்படுத்தி செயற்கை பவள பாறைகள் அமைக்கும் புதுமையான முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். மீன்களின் இனப்பெருக்கத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் வரை உள்ள கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடித்தொழிலே. ஆனால் சமீப காலமாக கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மீனவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் மீன்களே கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடலில் மீன்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும் வகையில் தென்னை ஓலைகளை கொண்டு சிறிய வீடு போன்ற அமைப்புகளை உருவாக்கி, அவற்றை கடலில் குறிப்பிட்ட இடங்களில் இறக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்புகள் செயற்கை பவள பாறைகளாக செயல்பட்டு, மீன்கள் அங்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்க உதவுகின்றன.

மீனவர்கள் கூறுகையில், “மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி கடல் வளத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். செயற்கை பவள பாறைகள் மூலம் எதிர்காலத்தில் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றனர்.

NO COMMENTS

Exit mobile version