Home செங்கல்பட்டு கிளாம்பாக்கம்: காவலர் – டிரைவர் மோதல்

கிளாம்பாக்கம்: காவலர் – டிரைவர் மோதல்

0
கிளாம்பாக்கத்தில் பயணிகள் கூட்டம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் காவலர் மற்றும் தனியார் ஆம்னி பேருந்து டிரைவர் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த தனியார் ஆம்னி பேருந்தில் ஏற முயன்ற அவர், டிக்கெட் கட்டணம் குறித்து டிரைவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு வழக்கத்தை விட அதிக கட்டணம் கூறப்பட்டதால், காவலர் அதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில நிமிடங்களில் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்து ஊழியர்கள் தடுக்க முயன்றும், இருவரும் தொடர்ந்து மோதிக்கொண்டனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த பயணி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போதிய காவல் பாதுகாப்பு இல்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். 24 மணி நேரமும் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version