Home செங்கல்பட்டு மின்வெட்டு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை.. வாலாஜாபாத் சாலையில் பரபரப்பு!

மின்வெட்டு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை.. வாலாஜாபாத் சாலையில் பரபரப்பு!

0

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மின் பகிர்மான மையத்திற்குட்பட்ட பல கிராமங்களில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ஊத்துக்காடு, நாயக்கன் குப்பம், அவலூர், ஆசூர், புத்தாகரம், தேவரியம்பாக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு 9 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் இருளில் தவித்தனர்.

மின்தடை ஏற்பட்ட உடனே பொதுமக்கள் வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு விசாரித்தபோது, “10 நிமிடங்களில் மின்சாரம் வழங்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வழங்கப்படாததால் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வாலாஜாபாத் – தாம்பரம் முக்கிய சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய பொதுமக்கள், மின்வெட்டுக்கான சரியான காரணம் கூட தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

இந்த போராட்டத்தால் வாலாஜாபாத் – தாம்பரம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் லாரிகள், தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. தொழிற்சாலைகளுக்கு சென்று கொண்டிருந்த பலரும் சாலையிலேயே சிக்கித் தவித்தனர்.

பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், பழைய சீவரம் பகுதியில் இருந்து வரும் முக்கிய மின் கேபிள் அறுந்து சேதமடைந்ததால் மின்தடை ஏற்பட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து தீவிர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version