Home செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் ‘சுவதேஷ் தர்ஷன் 2.0’ பணிகள் விரைவில்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

மாமல்லபுரத்தில் ‘சுவதேஷ் தர்ஷன் 2.0’ பணிகள் விரைவில்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

0

மாமல்லபுரத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசின் ரூ.30 கோடி மதிப்பிலான ‘சுவதேஷ் தர்ஷன் 2.0’ திட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான தடையில்லா சான்று பெறும் பணியின் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம், பல்லவ மன்னர்களின் சிற்பக்கலை மற்றும் புராதன சின்னங்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கடற்கரை கோயில் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன.

சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கடற்கரை மற்றும் சுற்றுப்புறங்களில் அடிப்படை வசதிகள் போதாமை குறித்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி, அலங்கார விளக்குகள், பசுமை புல்வெளி, சிசிடிவி கேமரா, கழிப்பறை, உணவகம், முதலுதவி மையம், அமர்வு இருக்கைகள் மற்றும் சாலையோர கடைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், தொல்லியல் துறையின் அனுமதி கிடைக்காததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் தாமதமாகி வந்தன. தற்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் நில அளவீடு மற்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விரைவில் அறிக்கை தயாரித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version