கூடுவாஞ்சேரி அருகே மாம்பழ திருவிழா

0
3

கூடுவாஞ்சேரி அருகே ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற இயற்கைச் சூழல் மிக்க மாம்பழ திருவிழாவில் 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடினர்.

கோடை வெப்பத்தின் தாக்கத்தை மறக்கடிக்கும் வகையில், தினமலர் நாளிதழ் மற்றும் ஹனு ரெட்டி குழுமம் சார்பில், கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள ஹனு ரெட்டி ராகவா மாம்பழ பண்ணையில் இந்த ஆண்டின் முதல் மாம்பழ திருவிழா நேற்று நடைபெற்றது.

காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற இந்த விழாவில், இயற்கை எழில் சூழ்ந்த மாம்பழ தோட்டத்தில் மரத்திலேயே பழுத்த மாம்பழங்களை சுவைத்து பார்வையாளர்கள் மகிழ்ந்தனர்.

திருவிழாவிற்கு வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. நாற்று நடுதல், ஏர் உழுதல், தானியங்களை கையால் அரைத்தல், மாட்டு வண்டி சவாரி, தப்பாட்டம், மல்லர் கம்பம், உறியடித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

மேலும், மாம்பழத்தால் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை, வடை, சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. காலை முதல் நண்பகல் வரை பாரம்பரிய கிராமிய வாழ்க்கை முறையை அனுபவிக்கும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது.

திருவிழாவின் முக்கிய அம்சமாக 156 அடி நீளமுள்ள “உலகின் மகிழ்ச்சியான உணவு மேஜை” அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் குடும்ப உணர்வோடு அமர்ந்து உணவருந்தினர்.

இந்த மாம்பழ திருவிழா வரும் ஜூன் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் சிறப்பாக நடைபெற உள்ளதாக ஹனு ரெட்டி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.