10 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை

0
3

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களத்தூர் ஊராட்சியில், இரு சமூக மக்களிடையே நிலவும் பிரச்னை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக ரேஷன் கடை திறக்கப்படாமல் பயன்பாடின்றி வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜே.ஜே. நகர் குடியிருப்பு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக முருங்கைகொங்கரை சாலையில் கடந்த 2015-16ஆம் ஆண்டில் ரூ.6.30 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.

ஆனால், கட்டப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் அந்த ரேஷன் கடை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை பெற சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்குவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இரண்டு சமூக மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடு காரணமாகவே ரேஷன் கடை திறக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்னைக்கு அதிகாரிகளும் இதுவரை நிரந்தர தீர்வு காண முடியாத நிலையில், பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ரேஷன் கடையை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.