செங்கல்பட்டு: தண்டவாளத்தில் மனித எலும்புக்கூடு

0
7

செங்கல்பட்டு அருகே ரயில்வே தண்டவாளம் ஒட்டிய காட்டு பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உதயம்பாக்கம் கிராமம் அருகே, ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் மனித எலும்புக்கூடு கிடப்பதை நேற்று உள்ளூர் மக்கள் கண்டனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரயில்வே தண்டவாளம் அருகிலுள்ள காட்டு பகுதியில் சிதறிக்கிடந்த மனித எலும்புக்கூட்டை கைப்பற்றினர். மேலும், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், எலும்புக்கூடு ஆணுக்கா அல்லது பெண்ணுக்கா சொந்தமானது, எவ்வளவு காலத்திற்கு முன்பு உயிரிழப்பு ஏற்பட்டது, இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு மரபணு மற்றும் பிற ஆய்வுகளுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.