செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் புதிய பல்பொருள் விற்பனை வாரச்சந்தை துவங்கப்பட்டுள்ளது. ஊசி முதல் ஏசி வரை அனைத்து வகையான புதிய மற்றும் பழைய பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த சந்தை மேம்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, திருக்கழுக்குன்றம் முத்திகை நல்லான்குப்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. அங்கு விவசாய கருவிகள், மீன், கருவாடு மற்றும் மாடுகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் காலப்போக்கில் விற்பனை மந்தமடைந்ததால், சந்தையை விரிவுபடுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதன் ஒரு பகுதியாக, 100 கடைகள் இயங்கும் வசதியுடன் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.40 கோடி செலவில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டது. மேலும், பல்லாவரம் வாரச்சந்தையில் வியாபாரம் செய்து வரும் வணிகர்களும் இங்கு கடைகள் அமைக்க அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து, முதல் முறையாக நடைபெற்ற புதிய வாரச்சந்தையில் 80-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டது. வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், எலக்ட்ரானிக்ஸ், கணினி உபகரணங்கள், ஆடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
புதிய சந்தைக்கு திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். எதிர்காலத்தில் இந்த வாரச்சந்தை, செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய வணிக மையங்களில் ஒன்றாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





