ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல், இரு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை மீறும் செயல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். ஈரானின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் மின்சாரக் கட்டமைப்பு மற்றும் பாலங்களை முழுமையாக அழிப்போம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே அண்மையில் எட்டப்பட்ட இரண்டு வாரப் போர் நிறுத்த ஒப்பந்தத்தால் மேற்காசியாவில் ஓரளவு அமைதி நிலவி வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல், போர் நிறுத்த விதிகளை அப்பட்டமாக மீறும் செயலாகும். அமெரிக்கா முன்வைத்துள்ள ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காவிடில், அந்நாட்டில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், முக்கியப் பாலங்களையும் அமெரிக்கப் படைகள் தரைமட்டமாக்கிவிடும்,” என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் உண்மையில் எந்த நாட்டு கப்பல்கள் தாக்கப்பட்டன என்பதில் சில முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் பகுதியில் இரண்டு இந்திய ஆயில் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தித் திருப்பி அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ட்ரம்ப் தனது பதிவில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாட்டு கப்பல்களை ஈரான் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இது சர்வதேச அளவில் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
போர் மேகங்கள் ஒருபுறம் சூழ்ந்தாலும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து வருகின்றன. ஈரானுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கக் குழு இன்று (திங்கள்கிழமை) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குச் செல்லும் என்று ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையில் நடைபெற்ற முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தரப்பில் யார் பங்கேற்பார்கள் என்பது இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி எச்சரிக்கையால் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் இந்த மோதலால் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





