செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகிலுள்ள காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முறையாக எடுத்துச் செல்லப்படாததால், திருவடிசூலம், வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 மையங்களில் அதிகளவில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் 4,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. ஆனால், கூலி தொழிலாளர்கள் தமிழ் புத்தாண்டு மற்றும் தேர்தல் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்றதால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல வேண்டிய லாரிகளும் முறையாக வராததால், குவிந்த நெல் வெளிப்புறத்தில் பாதுகாப்பின்றி கிடக்கிறது.
இதனால் மழையில் நனைந்து நெல் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு சிக்கலும் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமித்து விரைவாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





