டெல்லியை ‘சுருட்டிய’ ஆர்சிபி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

0
1

ஐபிஎல் 2026 சீசனின் பரபரப்பான லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி துவம்சம் செய்துள்ளது. பந்துவீச்சில் அனல் பறக்கவிட்ட ஆர்சிபி, பின்னர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆர்சிபி அணிக்கு, புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஜோடி ‘மின்னல்’ வேகத் தொடக்கத்தை அளித்தது. இவர்களின் துல்லியமான ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி பேட்டர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் வெறும் 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. இறுதியில், 16.3 ஓவர்களிலேயே டெல்லி அணி வெறும் 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

76 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ஆர்சிபி, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியது. ஒரு விக்கெட் இழந்தாலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி, வெறும் 6.3 ஓவர்களிலேயே 77 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிகள் பட்டியலில் தனது நிகர ரன் ரேட்டை (NRR) மிகப்பெரிய அளவில் உயர்த்தி, தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. குறிப்பாக, 81 பந்துகள் மீதமிருக்கையில் பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றி, அந்த அணியின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.