மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கியமான திட்டமாக கருதப்படும் கூடுவாஞ்சேரி–ஸ்ரீபெரும்புதூர்–ஆவடி புதிய ரயில் பாதை திட்டம் 13 ஆண்டுகளாகியும் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் தாமதமாகி வருகிறது. 2013ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், சுமார் 58 கி.மீ தூரத்தில் புதிய ரயில் பாதையை அமைப்பதை நோக்கமாகக் கொண்டது.
சென்னையை ஒட்டியுள்ள கூடுவாஞ்சேரி–ஸ்ரீபெரும்புதூர்–ஆவடி உள்ளிட்ட பகுதிகள் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், தினசரி போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், சென்னையை கடக்க பல மணி நேரங்கள் ஆகும் நிலை உள்ளது.
இந்த சூழலில், புதிய ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வந்தால், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரயில்வே வாரிய ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மொத்த திட்ட செலவு ரூ.3,136 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ஐந்து ஆண்டுகளில் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு மற்றும் ரயில்வே இணைந்து செயல்பட்டால், திட்டம் விரைவாக முன்னேறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கங்கள் வலியுறுத்துகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னை புறநகர் போக்குவரத்து அமைப்பில் முக்கிய மாற்றம் ஏற்படும் என்பது நிபுணர்கள் கருத்தாகும்.





