செங்கல்பட்டு மாவட்டத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி – பொதுமக்களுக்கு அழைப்பு

0
5

செங்கல்பட்டு மாவட்டத்தில் தீ விபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஜூன் 6 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் மாவட்டத்தின் 11 தீயணைப்பு நிலையங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு, மறைமலைநகர், சிறுசேரி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் நடைபெறும் இந்த பயிற்சி நிகழ்ச்சி, காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்படும் சூழல்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் முறைகள், அவசரகால மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்பு கருவிகளை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், வீடுகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய தீ பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பயிற்சியில் அதிக அளவில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட தீயணைப்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.