எஸ்.ஆர்.எம் பல்கலையில் மாநில சீனியர் நீச்சல் போட்டி: முதல் நாளிலேயே 5 புதிய சாதனைகள்!

0
4

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய தமிழ்நாடு மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளிலேயே ஐந்து புதிய சாதனைகள் படைக்கப்பட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நீச்சல் சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநில அளவிலான போட்டியில் 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநரும், செங்கல்பட்டு மாவட்ட நீச்சல் சங்கத் தலைவருமான மோகன கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மகளிர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் திவாஸ்ரீ கேசவன் 1:06.48 நிமிடங்களில் இலக்கை எட்டி புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 2025ஆம் ஆண்டு பிரமிதி ஞானசேகரன் பதிவு செய்த 1:07.05 நிமிடமே சாதனையாக இருந்தது. அதே போட்டியில் பிரமிதி ஞானசேகரன் 1:07.04 நிமிடங்களில் பந்தயத்தை முடித்து தனது முந்தைய சாதனையை முறியடித்த போதிலும் இரண்டாம் இடம் பிடித்தார்.

ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் எஸ்.ஏ.வி டைட்டன்ஸ் அணியின் பிரவீன்குமார் 58.47 வினாடிகளில் நீந்தி புதிய சாதனை படைத்தார். முந்தைய சாதனையாக 2025ஆம் ஆண்டு நிதிக் பதிவு செய்த 58.73 வினாடிகள் இருந்தது.

ஆண்கள் 50 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் எஸ்.டி.ஏ.டி அணியின் தனுஷ் சுரேஷ் 28.40 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனையை உருவாக்கினார். இதற்கு முன் யாதேஷ் பதிவு செய்த 28.51 வினாடிகளே சாதனையாக இருந்தது.

தொடர் போட்டிகளிலும் ஏசஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. மகளிர் 4×200 மீட்டர் பிரீஸ்டைல் தொடரில் ஏசஸ் அணி 9:21.85 நிமிடங்களில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தது. அதேபோல் ஆண்கள் 4×200 மீட்டர் பிரீஸ்டைல் தொடரிலும் ஏசஸ் அணி 8:06.72 நிமிடங்களில் பந்தயத்தை முடித்து தங்களது முந்தைய சாதனையை முறியடித்தது.

முதல் நாளிலேயே ஐந்து புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் மேலும் பல சாதனைகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு நீச்சல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.