எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பெருங்களத்தூர் மாணவி: உலக சாதனையை நோக்கி…

0
4

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி நிஷா, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்து சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனை மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

பெருங்களத்தூரைச் சேர்ந்த சசிகுமார் – அருணா தம்பதியரின் மகளான 16 வயது நிஷா, துரைப்பாக்கத்தில் உள்ள ஏபிஎல் குளோபல் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மலையேற்ற வீரரான தனது தந்தையின் வழிகாட்டுதலால் சிறுவயதிலிருந்தே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட நிஷா, தற்போது உலகின் ஏழு கண்டங்களில் உள்ள மிக உயரமான ஏழு சிகரங்களையும் ஏறும் லட்சியத்துடன் பயணித்து வருகிறார்.

ஏற்கனவே ஐந்து உயரமான சிகரங்களை வெற்றிகரமாக அடைந்துள்ள நிஷா, இந்தியாவின் இளம் மலையேற்ற வீராங்கனைகளில் ஒருவராக திகழ்கிறார். சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததன் மூலம் தனது சாதனைப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த வெற்றிக்காக இரண்டு ஆண்டுகளாக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக நிஷா தெரிவித்துள்ளார். குறைந்த ஆக்சிஜன் சூழலுக்கு உடலைத் தயார்படுத்த ‘ஹைபோக்சிக் டென்ட்’ பயிற்சி, சிறப்பு உடற்பயிற்சிகள் மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் நீண்டகால முகாம் அனுபவம் ஆகியவை தனது வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள டெனாலி சிகரத்தையும், பின்னர் அண்டார்டிகாவில் உள்ள உயரமான சிகரத்தையும் அடைய திட்டமிட்டுள்ளார். இந்த இரு சிகரங்களையும் வெற்றிகரமாக முடித்தால், உலகின் ஏழு கண்டங்களின் உயரமான ஏழு சிகரங்களையும் ஏறிய மிக இளம் பெண் என்ற உலக சாதனையை நிஷா படைக்க உள்ளார்.