சூணாம்பேடு பஜார் பகுதியில் கூடுதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூணாம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே பல ஆண்டுகளாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வந்தது. இந்த வங்கி மூலம் சூணாம்பேடு, மணப்பாக்கம், காவனூர், வில்லிப்பாக்கம், புதுப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வங்கி சேவைகளை பெற்று வந்தனர்.
இந்த வங்கியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கணக்குகள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் இந்த வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் சூணாம்பேடு பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட அங்காடி கடை வியாபாரிகளும் தினசரி பண பரிவர்த்தனைகளுக்கு இந்த வங்கியையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வங்கிக்கு வந்து செல்கின்றனர்.
தொடர் விடுமுறைக்கு பின்னர் வங்கி திறக்கும் நாட்களில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால், பெண்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பண பரிவர்த்தனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பணம் எடுப்பது மற்றும் செலுத்துவதற்கும் அதிக நேரம் பிடிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து சூணாம்பேடு ஆரவல்லி நகர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அங்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், முதியவர்கள் மற்றும் பெண்கள் வங்கிக்கு சென்று வர சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சூணாம்பேடு பஜார் பகுதியில் கூடுதலாக ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையை துவக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





