செங்கல்பட்டு வரதராஜன் தெருவில் மழைநீர் கால்வாய் பணி மந்தம்: மக்கள் அவதி

0
6

செங்கல்பட்டு நகராட்சி வேதாசலம் நகரில் உள்ள டாக்டர் வரதராஜன் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தெருவில் குடியிருப்புகள், வங்கிகள் மற்றும் பல தனியார் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த வடிகால்வாய் சேதமடைந்து, மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்த சாலை வழியாக தினமும் சென்று வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வரதராஜன் தெருவில் புதிய மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், 3 மாதங்களைக் கடந்தும் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் மந்தகதியில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலைகள் தோண்டப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருப்பதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.