”பாட்ஷாவை வெளியே கொண்டு வந்துட்டாங்க” ஸ்டாலின் சொன்னது ஏன்?

0
4

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’ பட பாணியில் பேசியது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மக்களவையில் அண்மையில் முறியடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவைக் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர், மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். அவர் பேசுகையில், நாங்கள் இவ்வளவு காலம் ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கம் மாதிரி அமைதியாகத்தான் எங்களது தேர்தல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், எங்களைப் போண்டி ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தென் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் ‘தொகுதி மறுவரையறை’ எனும் கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, அமைதியாக இருந்த நமக்குள்ளே இருந்த ‘பாட்ஷா’வை வெளிய கொண்டு வந்துட்டாங்க” என்றார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தை மேற்கோள் காட்டி பேசியபோது மைதானமே அதிர்ந்தது. தமிழகத்தின் உரிமைகளை நசுக்க நினைத்தால், திமுக ஒருபோதும் அமைதியாக இருக்காது என்பதை இந்தத் திரைமொழி மூலம் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதை ஒரு வரலாற்றுச் சாதனையாக முதலமைச்சர் குறிப்பிட்டார். டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு; இது வெறும் மசோதாவுக்கான வெற்றி அல்ல, ஜனநாயகத்திற்கான வெற்றி,” என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“மத்திய அரசின் அடிமைகளாக அதிமுக செயல்படுகிறது” எனக் குற்றம் சாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “பாஜக கொண்டு வரும் மக்கள் விரோதச் சட்டங்களுக்குத் துணை போகும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார். கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.