ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், சென்னை அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தனது அபாரமான பேட்டிங் மூலம் மும்பை பந்துவீச்சை நிலைகுலைத்தார்.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். 54 பந்துகளில் 101* ரன்கள் (ஆட்டமிழக்காமல்). சாம்சனின் இந்த இன்னிங்ஸில் 6 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும்.
நடப்புத் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஏற்கனவே ஒரு சதம் விளாசியிருந்த சாம்சன், இன்று தனது 2-வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகச் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் விளாசிய முதல் சதம் இதுவாகும்.
சாம்சனின் அதிரடியால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 22 ரன்களும், தேவால்த் பிரெவிஸ் 21 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் அல்லாஹ் கசன்பர் மற்றும் அஸ்வானி குமார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாகச் சென்னை அணிக்கு ட்ரேட் (Trade) செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், தற்போது சிஎஸ்கே ரசிகர்களின் புதிய நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார். 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் தற்போது மும்பை அணி விளையாடி வருகிறது.





