மறைமலை நகரில் ரயில் விபத்துகளை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

0
3

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துகளை தடுக்க ரயில்வே துறை சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை ரயில் பாதையில் தினசரி 60க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அதிவிரைவு ரயில்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் சிங்கபெருமாள் கோவில் மற்றும் மறைமலை நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை மீறி தண்டவாளங்களை கடப்பது, தண்டவாளத்தில் அமர்ந்து பேசுவது மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மறைமலை நகர் சாமியார் கேட் – பேரமனூர் ரயில்வே கேட் இடைப்பட்ட பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கானோர் தண்டவாளத்தை கடப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன.

பேரமனூர் மற்றும் டென்சி பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்டோர் ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விபத்துகளை தடுக்க ரயில்வே பாதையின் அருகே இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது மறைமலை நகர் பகுதியில் ரயில்வே துறை சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் 20 நாட்களில் நிறைவடையும் என்றும், அதன் மூலம் தண்டவாளங்களை அனுமதியின்றி கடப்பதை தடுக்க முடியும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை மூலம் ரயில் விபத்துகள் குறையும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.