மதுராந்தகம் வட்டார நெல் மூட்டைகள் ஆத்தூர் சேமிப்பு கிடங்கிற்கு மாற்றம்

0
1

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டாரத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், ஆத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் மையங்கள் என மொத்தம் 150க்கும் மேற்பட்ட நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சிலாவட்டம் பகுதியில் உள்ள நவீன நெல் சேமிப்பு கிடங்கில் 15,000 டன் அளவிலும், அண்டவாக்கம் பகுதியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் 25,000 டன் அளவிலும் அடுக்கி வைக்கப்பட்டு தார்ப்பாய்களால் மூடி பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிலாவட்டம் பகுதியில் முன்பு திறந்தவெளி சேமிப்புக்காக பயன்படுத்தப்பட்ட காலி இடத்தில் தற்போது மேற்கூரையுடன் கூடிய புதிய சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மதுராந்தகம், செய்யூர் மற்றும் அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தற்போது லாரிகள் மூலம் ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிற்கு மாற்றப்படுகின்றன.

அங்கு நெல் மூட்டைகள் முறையாக அடுக்கி வைக்கப்பட்டு, மழை மற்றும் வெயிலில் சேதமடையாமல் தார்ப்பாய்களால் மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக சேமிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.