சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான தாம்பரத்தில், ரயில்வே லைனை பாதுகாப்பாக கடக்க கட்டப்பட்ட சுரங்க நடைபாதை தற்போது குற்றச்செயல்களின் மையமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில், இந்து மிஷன் மருத்துவமனை எதிரே ரயில்வே பாதையை கடக்க பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் முறையாக பராமரிக்கப்பட்டதால் மாணவர்கள், பெண்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் நாளடைவில் பராமரிப்பு குறைந்து, சமூக விரோத செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக செயின் பறிப்பு, வழிப்பறி, கஞ்சா பயன்பாடு மற்றும் விபச்சாரம் போன்ற குற்றச்செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் இரவு நேரங்களில் மக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படத் தொடங்கினர்.
இதையடுத்து ஒரு கட்டத்தில் சுரங்க நடைபாதை மூடப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு 2014ஆம் ஆண்டு மீண்டும் சீரமைத்து திறக்கப்பட்டது. அப்போது காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும், அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பூட்டப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் தற்போது மீண்டும் பராமரிப்பின்றி சுரங்க நடைபாதை பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. நுழைவாயிலில் செடிகள் மற்றும் புதர்கள் வளர்ந்துள்ளதுடன், உட்பகுதி குற்றச்செயல்களின் கூடாரமாக மாறிவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் அந்த பகுதியை கடக்கவே மக்கள் அச்சப்படுகின்றனர். தாம்பரம் போலீசாரும் ரயில்வே போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. இந்த பிரச்சினையில் தலையிட்டு சுரங்க நடைபாதையை சீரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





