மாமல்லபுரம் அருகே மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை – குடும்ப தகராறு விபரீதம்

0
5

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்ட மகனை, ஆத்திரமடைந்த தந்தை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், மதுபோதையில் வீட்டில் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில், பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை வெட்ட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பிரபாகரனின் தந்தை மகனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் தந்தை-மகன் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த தந்தை, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மகனை சுட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரபாகரன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கி எவ்வாறு பெறப்பட்டது, அது சட்டபூர்வமானதா, சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறு துப்பாக்கிச்சூட்டாக மாறிய இந்த சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.