
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளான திக்கு விஜயம், திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் இன்று முதல் புதன்கிழமை வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், மதுரை மாநகரில் இன்றும் நாளையும், நாளை மறுநாளும் (ஏப்ரல் 27, 28, 29) அதிரடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதையொட்டி, இன்று இரவு 10 மணி முதல் நாளை மதியம் 3 மணி வரை நான்கு ஆவணி மூல வீதிகளிலும் சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நுழையவோ, நிறுத்தவோ அனுமதி இல்லை. அதேபோல், மாசி வீதிகளில் இன்று திக்கு விஜயம் நடைபெறும் நேரத்தில் கீழமாசி வீதியில் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 10 மணி முதல் புதன்கிழமை தேரோட்டம் முடியும் வரை, நான்கு மாசி வீதிகளிலும் இருசக்கர வாகனங்கள் உட்பட எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்த அனுமதி கிடையாது எனப் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
திருக்கல்யாணத்தைக் காண வரும் பக்தர்களுக்காகச் சிறப்பு வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் பின்வருமாறு வாகனங்களை நிறுத்த வேண்டும்:
மஞ்சள் நிற அனுமதி சீட்டு: மேல ஆவணி மூல வீதி.
இளஞ்சிவப்பு (ரோஸ்) நிற அனுமதி சீட்டு: வடக்கு ஆவணி மூல வீதி.
நீல நிற அனுமதி சீட்டு: தெற்கு ஆவணி மூல வீதி.
அனுமதி சீட்டு இல்லாதவர்கள்: கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு மாசி வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்திக் கொள்ளலாம்.
தேரோட்டம் நடைபெறும் புதன்கிழமை அன்று பகல் முழுவதும் கீழமாசி வீதி மற்றும் கீழமாரட் வீதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கவனித்து, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




