இன்சூரன்ஸ் துறையில் முகேஷ் அம்பானியின் அதிரடி! ஜியோ – அலையன்ஸ் மெகா கூட்டணி ஒப்பந்தம்!

0
3

இந்தியத் தொழில் உலகின் ஜாம்பவான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், நாட்டின் நிதிச் சேவைத் துறையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் நிதிப் பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் (Jio Financial Services), ஐரோப்பாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் எஸ்.இ (Allianz SE) உடன் இணைந்து இந்தியாவில் பொதுக் காப்பீட்டுத் துறையில் இறங்க உள்ளது.

பல மாதங்களாக நீடித்து வந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் அலையன்ஸ் ஐரோப்பா ஆகிய இரு நிறுவனங்களும் சமமான பங்குகளைக் கொண்ட (50:50) கூட்டு நிறுவனத்தைத் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன.

முதற்கட்டமாகப் பொதுக் காப்பீட்டுத் துறையில் களமிறங்கும் இந்த நிறுவனம், தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கும்.

இந்தக் கூட்டு நிறுவனம் தேவையான அனைத்து அரசு மற்றும் ஒழுங்குமுறை (IRDAI) அனுமதிகளைப் பெற்ற பிறகு தனது செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.

இந்தியாவில் ஒரு “முழுமையான நிதிச் சேவை தளம்” (Full-service Financial Hub) உருவாக்க வேண்டும் என்பது முகேஷ் அம்பானியின் நீண்டகாலத் திட்டமாகும். அந்தத் திட்டத்தின் மிக முக்கிய மைல்கல்லாக இந்தக் காப்பீட்டுத் துறை நுழைவு பார்க்கப்படுகிறது.

தற்போது பொதுக் காப்பீட்டுக்கு மட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், லைஃப் இன்சூரன்ஸ் (Life Insurance) துறையிலும் இதே போன்ற சமபங்கு கூட்டணியைத் தொடங்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இதற்கான தனி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நிறுவனங்களும் ஏற்கனவே மறுகாப்பீட்டு (Re-insurance) பணிகளில் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டெலிகாம் மற்றும் ரீடைல் துறையில் புரட்சியை ஏற்படுத்திய அம்பானி, தற்போது ஜியோ பைனான்சியல் மூலம் காப்பீட்டுத் துறையிலும் மற்ற நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.