அச்சரப்பாக்கம்: மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

0
2

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே மின்சார பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அச்சரப்பாக்கம் அடுத்த கோட்டைப்பஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாச்சலம். இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், திருமுக்காடு கிராமத்தில் ஏற்பட்ட மின்சார கோளாறை சரிசெய்யும் பணிக்காக வேதாச்சலம் சென்றிருந்தார். அங்கு மின் இணைப்பை முழுமையாக நிறுத்தாமல் பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததார்.

தகவலறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த வேதாச்சலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது, பாதுகாப்பு விதிமுறைகளில் ஏதேனும் அலட்சியம் நடந்ததா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேதாச்சலத்தின் திடீர் உயிரிழப்பு அவரது குடும்பத்தினரையும், சக ஊழியர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.