செங்கல்பட்டு மக்கள் குறைதீர் கூட்டம்: 382 மனுக்கள் பெறப்பட்டன

0
3

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.வீரப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

இந்த கூட்டத்தில் பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், குடிநீர் வசதி, சாலை அமைத்தல், மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு பொதுநல கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 382 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மனுக்களின் நிலை குறித்து உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதனிடையே, சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள எம்.வீரப்பனை, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மரியாதை நிமித்தமாக ஆட்சியருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்த சங்க நிர்வாகிகள், மாவட்டத்தின் விவசாய வளர்ச்சி, கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.