சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள Madras Crocodile Bank Trust முதலைப் பண்ணையில் தற்போது அமெரிக்க அனகோண்டா பாம்புகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு வரும் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றை கண்டு ரசித்து வருகின்றனர்.
வடநெம்மேலி பகுதியில் செயல்பட்டு வரும் இந்த முதலைப் பண்ணை, கடந்த 1976ஆம் ஆண்டு அமெரிக்க உயிரியல் ஆராய்ச்சியாளர் Romulus Whitaker அவர்களால் தொடங்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரிய வகை முதலைகள், பாம்புகள், ஆமைகள், பல்லிகள் உள்ளிட்ட உயிரினங்கள் இங்கு பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தென் அமெரிக்கா மற்றும் செக் குடியரசு பகுதிகளில் இருந்து 2018ஆம் ஆண்டு ஐந்து அனகோண்டா பாம்புகள் சென்னை முதலைப் பண்ணைக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அவை குட்டிகளை ஈன்றன. தற்போது 6 முதல் 7 வயதான இந்த பாம்புகள் ஒவ்வொன்றும் சுமார் 12 அடி நீளமும், 10 முதல் 15 கிலோ எடையும் கொண்டுள்ளன.
ஆண் பாம்புகளுக்கு “தமிழ்ச்செல்வன்”, “லோகி” என்றும், பெண் பாம்பிற்கு “மெடுசா” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை பாதுகாப்பு பகுதியில் மட்டுமே பராமரிக்கப்பட்ட இந்த அனகோண்டாக்கள், தற்போது சிறப்பு பாதுகாப்பு கண்ணாடி அறையில் நீரோட்ட வசதியுடன் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
தென் அமெரிக்க ஆறுகளில் வாழும் அனகோண்டா பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்பு இனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. இவை 25 அடி நீளம் மற்றும் 500 கிலோ எடை வரை வளரக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.




