செங்கல்பட்டு மாவட்டம் Mamallapuram பகுதியில் அமைந்துள்ள பழமையான Adi Varaha Perumal Temple கோவில் வளாகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுப்பணித்துறை சாலை அருகே பாறைக்குன்றில் அமைந்துள்ள இந்த கோவில், பல்லவர் கால வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கோவிலில் பல்லவ மன்னர்களான சிம்மவிஷ்ணு மற்றும் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்த புடைப்புச் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தியதுடன், கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் சிலர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கோவில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து தொல்லியல் துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தற்போது கோவில் வளாக பாதுகாப்பிற்காக மூன்று பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று ஷிப்ட்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினருக்கும், பாதுகாப்பு நடவடிக்கைக்காக காவல்துறையினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்லவர் கால பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாறு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




