செங்கல்பட்டு ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

0
4

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள எம். வீரப்பன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நலன் காக்கும் நாள் மற்றும் குறைதீர் கூட்டத்தில் முதன்முறையாக தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்த பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 382 மனுக்கள் பெறப்பட்டன.

பட்டா, முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மனுக்கள் அளித்தனர். அவர்களது கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் வீரப்பனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பாசன வசதிகள், கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி தொடர்பான கோரிக்கை மனுக்களையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மகளிர் திட்ட இயக்குநர் லோகநாயகி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதன்மை மண்டல மேலாளர் முருகானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிய ஆட்சியர் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் குறைதீர் கூட்டம் என்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.