காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தில் கடந்த மே 31ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ச. கீர்த்தனா மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
முதலில், ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் மோபிஸ் நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி, தீ விபத்திற்கான காரணங்கள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் எதிர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த மே 31ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவின்படி தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை முழுமையாக கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் பணியாளர்கள் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. மேலும், அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் ஹூண்டாய் மோபிஸ் நிறுவன பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
பின்னர், அமைச்சர்கள் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை வளாகத்தை நேரில் பார்வையிட்டு சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ஏ. ராமன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, உத்திரமேரூர் எம்.எல்.ஏ. முனிரத்தினம், ஆலந்தூர் எம்.எல்.ஏ. ஹரிஷ், திருப்பெரும்புதூர் சார் ஆட்சியர் நல்லசிவன், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தருண் கார்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




