செங்கல்பட்டு: தனது வாக்கைப் பதிவு செய்தார் அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன்!

0
4

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செங்கல்பட்டு தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன் தனது வாக்கை இன்று காலைப் பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வாக்குச் சாவடிக்கு வருகை தந்த அவர், பொதுமக்களோடு வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருவதைக் காண முடிகிறது.

தனது வாக்கினைப் பதிவு செய்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர் கஜேந்திரன் கூறியதாவது,
“இன்று காலை முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். நான் இன்று காலை முதலாவதாகச் சென்று எனது வாக்கைப் பதிவு செய்துள்ளேன். ஜனநாயகத்தின் வலிமையைப் பறைசாற்ற ஒவ்வொரு குடிமகனும் தவறாமல் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இந்தத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது கள நிலவரம் மூலம் தெளிவாகத் தெரிகிறது.”

செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், வேட்பாளரின் இந்த ‘மாற்றம்’ குறித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு அமைதியாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.