சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் அதிரடி மாற்றம்: 21 புள்ளிகள் முறை நீக்கம்!

0
2

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளை மேலும் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் மாற்றும் நோக்கில், புள்ளிகள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை உலக பேட்மிண்டன் சம்மேளனம் (BWF) அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த 21 புள்ளிகள் கொண்ட ஆட்ட முறை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, ஒரு செட்டில் 21 புள்ளிகள் எடுக்க வேண்டும்; மூன்று செட்கள் கொண்ட ஆட்டத்தில் இரண்டு செட்களை வெல்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் (Best of Three). ஆனால், இந்தப் புதிய மாற்றத்தின்படி இனி ஒரு செட்டிற்கு 15 புள்ளிகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலும் மூன்று செட்கள் கொண்ட (15×3) முறையே பின்பற்றப்படும். இந்தப் புதிய விதிமுறை வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி முதல் சர்வதேசப் போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று BWF தெரிவித்துள்ளது.

இந்தப் மாற்றத்திற்கான முக்கிய காரணமாக, ஒரு போட்டியின் நேரத்தைக் குறைப்பதும், ஒளிபரப்புத் தரத்தை மேம்படுத்துவதும் கூறப்படுகிறது. 21 புள்ளிகள் கொண்ட போட்டிகள் சில நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிப்பதால், வீரர்களின் உடல் தகுதி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் சவால்கள் ஏற்படுகின்றன. 15 புள்ளிகள் முறை அறிமுகமாவதன் மூலம், ஒவ்வொரு புள்ளியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும்; இது ரசிகர்களிடையே ஆட்டத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், லக்ஷ்யா சென், பி.வி. சிந்து போன்ற நீண்ட நேரம் விளையாடும் திறன் கொண்ட வீரர்களுக்கு இது சவாலாக அமையலாம் என விளையாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர்.