செங்கல்பட்டு மாவட்டம் புதுபெருங்களூரைச் சேர்ந்த முத்துலட்சுமி (68) என்ற மூதாட்டி, நேற்று காலை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது தாம்பரத்திலிருந்து மறைமலை நகர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து (118B) திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவர்மீது மோதியது. இந்த விபத்தில் முத்துலட்சுமி கடுமையாக காயமடைந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் பேருந்து ஓட்டுநர் சரவணன் (54) கைது செய்யப்பட்டார்.
விபத்து ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





