அதிமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா? பெண்களை வெயிலில் காத்திருக்க வைத்த அவலம்!

0
10

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தரப்பில் பெண்களுக்குப் பகிரங்கமாகப் பணம் விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மக்களாட்சி” என்ற பெயரில் அரங்கேறும் இந்த “பணநாயக” விளையாட்டு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சியில் அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்விற்காக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களை அதிமுக நிர்வாகிகள் வரவழைத்திருந்தனர். வேட்பாளர் வருவதற்காகப் பெண்களைச் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகக் கடும் வெயிலில் அதிமுக நிர்வாகிகள் காத்திருக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு அங்கு வந்த வேட்பாளர் சென்றதும், அங்கிருந்த பெண்களுக்குத் தலா 300 ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் பெற்றுச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது.

மக்களிடம் வாக்கு கேட்கச் செல்லும் வேட்பாளர், தன்னை ஒரு மக்கள் சேவகராகக் காட்டிக்கொள்ளாமல், ஏழை எளியப் பெண்களைக் கடும் வெயிலில் நான்கு மணி நேரம் தவம் கிடக்க வைத்தது அதிகாரத் திமிரின் உச்சம் என சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். பெண்களின் நேரத்திற்கும் உழைப்பிற்கும் மதிப்பளிக்காமல், அவர்களை வெறும் ‘வாக்கு இயந்திரங்களாக’ கருதி, இறுதியில் முன்னூறு ரூபாயை எறிந்து அவர்களின் வறுமையைச் சிறுமைப்படுத்தியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த கண்டனத்தை எழுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையம் பறக்கும் படைகள் மூலம் தீவிரக் கண்காணிப்பு நடத்தி வருவதாகக் கூறும் நிலையில், இவ்வளவு பகிரங்கமாகப் பணம் விநியோகிக்கப்படுவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. வேட்பாளர் வருகைக்காக மக்களை வெயிலில் காய வைத்த ஒரு வேட்பாளர், வெற்றி பெற்றால் மக்களின் துயரை எப்படித் துடைப்பார் என வாக்காளர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.