அதிமுக வேட்பாளர் நூதனப் பிரச்சாரம்! பிரிட்ஜ் மற்றும் சிலிண்டருடன் வாக்கு சேகரிப்பு!

0
2

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவரப் பல்வேறு நூதன முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், மதுராந்தகம் (தனி) தொகுதியின் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலவசப் பொருட்களைக் காட்சிப்படுத்தி வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேடவாக்கம், சூரை, நெல்வாய் மற்றும் வையாவூர் உள்ளிட்ட கிராமங்களில் வேட்பாளர் மரகதம் குமரவேல் இன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசப் பொருட்களான பிரிட்ஜ் (குளிர்சாதனப் பெட்டி) மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றைப் பிரச்சார வாகனத்தில் வைத்து, அவை பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ‘லைவ்’ டெமோ காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேடந்தாங்கல் கூட்டுச் சாலை பகுதியில் ஆடல் பாடல் மற்றும் ஆட்டம்பாட்டத்துடன் வந்து வேட்பாளருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மரகதம் குமரவேலுக்கு, அதிமுக நிர்வாகிகள் இரண்டு ஜேசிபி (JCB) இயந்திரங்கள் மூலம் டன் கணக்கான மலர்களைத் தூவி, பிரம்மாண்ட மாலை அணிவித்து கௌரவித்தனர். தேர்தல் களத்தில் மற்ற வேட்பாளர்களுக்குப் போட்டியாக, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நேரடியாகப் பொருட்களாகவே காண்பித்து ‘கெத்து’ காட்டியது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

வாக்கு சேகரிப்பின் போது பேசிய வேட்பாளர், “மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அதிமுகவின் லட்சியம். எடப்பாடி பழனிசாமி அறிவித்த அனைத்து இலவசப் பொருட்களும் ஒவ்வொரு இல்லத்திற்கும் வந்து சேரும்,” என உறுதி அளித்தார். இந்தப் பிரச்சாரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.