அச்சிறுப்பாக்கத்தில் விபத்து: கோவிலுக்கு சென்ற சிறுமி பலி

0
5

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற 16 வயது சிறுமி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் கள்ளபிரான் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகள் ரெபேகா (16). இவர் தனது தாய் அலமேலு (55) மற்றும் மூத்த சகோதரி ரெபேத்தா (23) ஆகியோருடன் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள மழைமலை மாதா கோவிலுக்கு வழிபாட்டிற்காக சென்றிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் அவர்கள் பேருந்தில் அச்சிறுப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பின்னர் சாலையை கடக்க முயன்றபோது, திண்டிவனம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரெபேகா மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரெபேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் மற்றும் சகோதரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை கடக்கும் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.