செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட சிதண்டிமண்டபம் ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதண்டிமண்டபம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அன்றாட தேவைகளுக்காக நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8.30 மணியளவில் மெய்யூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு பிரச்சினை கொண்டு செல்லப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
சிதண்டிமண்டபம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





