குன்றத்தூர் அருகே சோமங்கலம் புதுநல்லூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு போலீசார் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
சோமங்கலம் அடுத்த புதுநல்லூரில் கடந்த 23-ம் தேதி விஜயன் என்பவரின் வீடும், அருகில் வசித்து வந்த வெங்கடேசன் என்பவரின் வீடும் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இதனால் இரண்டு குடும்பங்களும் பெரும் சிரமத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும், இரண்டு குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்பட்டது. அதோடு, 25 கிலோ அரிசி மூட்டை, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், ஆடைகள், பாய், தலையணை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.
போலீசாரின் இந்த மனிதநேய உதவிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.





